சற்று முன் :

வேளாண்மைப் படிப்பு

வேளாண்மை
Written by Administrator   
Saturday, 31 March 2012 13:29

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 1971ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு சென்னை சைதாப்பேட்டையில் 1868ஆம் ஆண்டு வேளாண்மைப் பள்ளி என்ற பெயரில் இது செயல்பட்டு வந்தது. அதற்குப் பின்  1920ஆண் ஆண்டில் இடமாற்றம் செய்யப்பட்டது. அப்போது இந்தக் கல்வி நிலையம் சென்னை பல்கலைக்கழகத்தின்  கட்டுப்பாட்டின்கீழ்தான் செயல்பட்டு வந்தது. தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு கல்லூரகள் பதினொன்றும், தனியார் கல்லூரிகள் மூன்றும் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் செயல்படும் அனைத்துக் கல்லூகளிலும் ஆண், பெண் இருபாலரும் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதோடு, எல்லாக் கல்லூரிகளிலும் விடுதி வசதி உண்டு. தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு வேளாண் கல்லூரியில் சேருவது என்றாலும், வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும்.

பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல் வேதியியல் பாடங்களுடன் உயிரியல், அல்லது வேளாண் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றவர்கள் பி.எஸ்சி. வேளாண் இளநிலை பட்டப்பஐப்பில் சேரலாம். தனியார் உரத் தொழிற்சாலை, அரசு வேளாண் நிறுவனங்கள், வேளாண் ஆராய்ச்சிக் கூடங்கள், வேளாண் உரத் தொழிற்சாலை நிறுவனங்கள், வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது, உதவி வேளாண் தொடக்க அதிகாரிகள், வேளாண் அதிகாரிகள் போன்று பல்வேறு அரசுப் பதவிகளுக்கும்  செல்ல முடியும்.  தமிழ்நாட்டில் உள்ள வேளாண் கல்லூரிகள் மற்றும் படிப்புகள் விவரம்:

கோவை:

1. வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்: இந்தக் கல்வி நிலையத்தில் இளநிலைப் பட்டப் படிப்பாக பி.எஸ்சி (அக்ரிகல்ச்சர்), பி.டெக். (பயோடெக்னாலஜி), பி.டெக்.(பயோ இன்பர்மேட்டிக்ஸ்), பி.எஸ். (அக்ரிபிஸினஸ் மேனேஜ்மெண்ட்), பி.டெக். (அக்ரிகல்ச்சுரல் இன்பர்மேஷன் டெக்னாலஜி) ÷ பான்ற படிப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. நான்கு ஆண்டு படிப்பான இந்த இளநிலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தக் கல்லூரியில் பி.எஸ்சி.(அக்ரிகல்ச்சர்) 1920ஆம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த கல்வி நிலையத்தில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள்  வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி கல்வி நிலையம், டி.என்.ஏ.யூ. கோவை - 641003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். போன்: 0422 - 6611410.

2. ஹார்டிகல்ச்சர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்தக் கல்லூரியில் பி.டெக்.(தோட்டக்கலை) மற்றும் பி.எஸ்சி.(தோட்டக்கலை) போன்ற படிப்புகள் இளநிலை பட்டப் படிப்பில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. 100 ஹெக்டேர் பரந்து விரிந்த பரப்பளவு கொண்ட இந்தக் கல்லூரி கல்வி, பயிற்சி, உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கு சிறந்த கல்வி நிலையமாக கருதப்படுகிறது. இந்தக் கல்வி நிலையம் குறித்து மேலும் விவரம் அறிய, ஹார்ட்டிகல்ச்சர் காலேஜ் அண்ட் ரிசர்ச்  இன்ஸ்டிட்யூட், பெரிய குளம் - 625604 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். போன்:  04546 -231726.

3. அக்ரிகல்ச்சர் என்ஜினீயரிங் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்: வேளாண்மை பொறியியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் முதல் முதலில் பி.இ. (அக்ரிகல்ச்சர்) இளநிலை பட்டப் படிப்பு 1972 ஆம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்தக் கல்லூரியில்  பி.டெக். (ஃபுட் புராஸஸ் என்ஜினீயரிங்) மற்றும் பி.டெக். (எனர்ஜி அண்ட் என்வயராண்மென்டல் என்ஜினீயரிங்) பட்டப் படிப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ள இந்தப் படிப்பில் சேருவதற்கு பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். கோவையில் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரி பற்றி மேலும் விவரம் தெரிந்துகொள்ள  0422 - 6611255  என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மதுரை:

1. வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிலையம்: மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் இந்த அரசு வேளாண்மைக் கல்லூரியானது 1965ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. ஆண்கள்  மற்றும் பெண்களுக்கான தனித்தனியான விடுதி வசதிகள் மற்றும் பட்டப் படிப்பில் ஆரம்பித்து ஆராய்ச்சிப் படிப்பு வரை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்தக் கல்லூரியில் பி.எஸ்.சி. (அக்ரிகல்ச்சர்) இளநிலைப் பட்டப் படிப்பில் சேரலாம். இந்தக் கல்வி நிலையம் குறித்து மேலும் தகவல் அறிய : 0452 - 2422956.

2. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஹோம் சயின்ஸ் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிலையம் மதுரையில் இயங்கிவருகிறது. 1980ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கல்லூரியில் ஆண் பெண் இருபாலரும் படிக்கலாம். விடுதி வசதியும் இருக்கிறது. பி.எஸ்.சி(ஹோம்சயின்ஸ்), பி.எஸ்சி (அக்ரிகல்ச்சர்) போன்ற பாடங்களும், அதேபோல இதே பாடங்களில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளும் இந்தக் கல்வி நிலையத்தில் படிக்கலாம். மனையியல் மற்றும் விவசாப்படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்தக் கல்லூரியில் சேரலாம். விவரங்களுக்கு : 0452 -2422956.

திருச்சி:

1. அக்ரிகல்ச்சுரல் என்ஜினீயரிங் கல்லூரி  1992ஆம் ஆண்டு உருவானது. திருச்சியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இந்தக் கல்லூரியில் பி.டெக். (அக்ரிகல்ச்சுரல் என்ஜினீயரிங்) நான்காண்டு இளநிலை வேளாண் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அக்ரிகல்ச்சுரல் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், குமுலூர், லால்குடி, திருச்சி. போன் : 0431 - 2541218.

2. அன்பில் தர்மலிங்கம் அக்ரிகல்ச்சுரல் காலேஜ் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிலையம்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் நான்காவதாக உருவாக்கப்பட்ட கல்வி நிலையம் இது. இது 1989ஆம் ஆண்டு லால்குடியில் செயல்பட்டு வந்த இந்த கல்வி நிலையம், 1992ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள குட்டபட்டு கிராமத்தில் கட்டப்பட்டது. மிகப்பெரிய ஆராய்ச்சிக் கூடங்கள், சிறந்த உள்கட்டமைப்பு, விடுதி வசதிகள் உள்ள இந்த கல்வி நிலையத்தில் பி.எஸ்சி (அக்ரிகல்ச்சர்) படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு : 0431 - 2906100.

தூத்துக்குடி:

வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிலையம்: 1984 - 85 இடைப்பட்ட கால இடைவெளியில் உருவான இக்கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளத்தில் அமைந்துள்ளது. முதன்முதலில் இந்தக் கல்லூரி திருநெல்வேலி பேட்டையில் எம்.டி.டி. இந்துக் கல்லூரி வளாகத்தில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டது. 1989ஆம் ஆண்டுதான் இந்தக் கல்லூரி ஆராய்ச்சிக் கல்வி நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. 1990ஆம் ஆண்டுதான் முதுநிலைப் பட்டப் படிப்பு இந்த கல்வி நிலையத்தில் துவங்கப்பட்டது.  சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சிக் கூடங்கள், விடுதி வசதி உள்ள இந்தக் கல்வி நிலையத்தில் பி.எஸ்சி (அக்ரிகல்ச்சர்) படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு: அக்ரிகல்ச்சுரல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி கல்வி நிலையம், கிள்ளிகுளம், வல்லநாடு - 628252. தூத்துக்குடி மாவட்டம். போன் : 04630 - 261226.

தேனி:

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அமைந்துள்ள ஹார்ட்டிகல்ச்சர் காலேஜ் அண்ட் ரிசர்ச் கல்வி நிலையம் 1990ஆம் ஆண்டு உருவானது. தோட்டக்கலையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு வரை இந்தக் கல்வி நிலையத்தில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இயற்கை வனப்புடன் அமைந்துள்ள இந்தக் கல்லூரியில் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஹார்டிகல்ச்சர் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், பெரியகுளம் - 625604, போன்: 04546 - 234661.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளயத்தில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி 1998ஆம் ஆண்டு செயல்பட ஆரம்பித்தது. வனம் மற்றும் வன ஆராய்ச்சிக் குறித்து இந்தக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. பி.எஸ்சி. வனவியல் பிரிவில் இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் இந்தக் கல்லூரியில் சேரலாம். விவரங்களுக்கு : பாரஸ்ட்டரி காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், கோத்தகிரி ரோடு, மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம். போன்: 04254 - 222010, 227418.

அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தவிர மூன்று தனியார் வேளாண் கல்லூரிகளும் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன.

1.    ஆதிபராசக்தி அக்ரிகல்ச்சுரல் கல்லூரி: 1999ஆம் ஆண்டு செயல்பட ஆரம்பித்த இந்தக் கல்லூரியில் பி.எஸ்சி. அக்ரிகல்ச்சர், பி.எஸ்சி. தோட்டக்கலை படிப்புகளைப் படிக்கலாம். இதுதவிர டிப்ளமோ மற்றும் முதுநிலைப் படிப்புகளும் இந்தக் கல்லூரியில் படிக்கலாம். விவரங்களுக்கு: ஆதிபராசக்தி அக்ரிகல்ச்சுரல் அண்ட் ஹார்ட்டிகல்ச்சுரல் கல்லூரி, ஜி.பி. நகர், கலவை, வேலூர் மாவட்டம். போன் : 04173 - 295050, 295080.

2.    வானவராயர் வேளாண் கல்லூரி:  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்தத் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி அக்ரிகல்ச்சர் பட்டப் படிப்பை படிக்கலாம். இதுதவிர இரண்டாண்டு வேளாண் டிப்ளமோ படிப்பும் படிக்கலாம். விவரங்களுக்கு: வானவராயர் வேளாண் கல்லூரி, உடுமலைப்பேட்டை ரோடு, பொள்ளாச்சி - 642003. போன்: 04259 - 236070.

3.    தந்தை ரோவர் வேளாண் கல்லூரி: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த தனியார் கல்லூரி பெரம்பலூரில் அமைந்துள்ளது. பி.எஸ்சி. (அக்ரிகல்ச்சர்) மற்றும் தோட்டக்கலையில் இரண்டாண்டு டிப்ளமோ படிப்பு இந்த கல்வி நிலையத்தில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு: தந்தை ரோவர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அக்ரிகல்ச்சர் அண்ட் ரூரல் டெவலப்மெண்ட், எலாம்பலூர் தபால், பெரம்பலூர் - 621212. போன் : 04328 - 275030, 277418.

கட்டண விவரம்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பி.எஸ்சி., அக்ரிகல்ச்சர், தோடக்கலை, மனையியல், வனவியல் போன்ற இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.6275 கட்டணம் வசூலிக்கிறது. அதேபோல பி.இ. மற்றும் பி.டெக். வேளாண் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ. 31,275 கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு கட்டணம் நிலவரம்தான். இந்தக் கட்டணத்தில் இந்த ஆண்டு சில மாறுதல்கள் நிகழலாம். இந்தக் கட்டணங்கள்தான், பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு வேளாண் கல்லூரிகளில் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தனியார் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு மற்றும் இதரச் செலவினங்களுக்காக இந்தக் கட்டணத்தில் சில மாறுதல்கள் இருக்கலாம்.

 

Comments  

 
0 #1 k.saranya 2013-10-22 13:18
:lol:
Quote
 

Add comment

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)


Security code
Refresh